கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் மீட்பு; சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய பலியான வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-08-04 21:45 GMT

கொடுமுடி

கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய பலியான வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

2 பேர் சாவு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொந்தளம்புதூர் காலனி பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரது மகன்கள் குப்புராஜ் (வயது 19), சவுத்ரி (14) மற்றும் சிவக்குமார் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (18). இவர்கள் 3 பேரும் தங்கள் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வெங்கம்பூரில் உள்ள காவிரி ஆற்றுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். இதனால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொடுமுடி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் மலைக்கொழுந்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆற்றில் இறங்கி 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் குப்புராஜ், சவுத்ரி ஆகியோரது உடல்கள் அவர்கள் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மீட்கப்பட்டது.

வாலிபர் உடல் மீட்பு

இதைத்தொடர்ந்து இரவு வெகு நேரமாக ஜெகதீஸ்வரனை தேடி பார்த்தார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஜெகதீஸ்வரனை ேதடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மதியம் 3 மணி அளவில் ஜெகதீஸ்வரனின் உடல் கொடுமுடி புது படித்துறையின் அருகே உள்ள ஒத்தைப்பனை மரம் என்ற இடத்தில் கரை ஒதுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்டனர்.

3 ஆக உயர்வு

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் அங்கு சென்று ஜெகதீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஜெகதீஸ்வரனின் உடல் கிடைத்ததை தொடர்ந்து கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்