கிணற்றில் பள்ளி மாணவி பிணம்உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

செஞ்சி அருகே கிணற்றில் பள்ளி மாணவி பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-17 18:47 GMT

செஞ்சி, 

கிணற்றில் பிணம்

செஞ்சி அருகே உள்ள பரதன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 40). இவரது மகள் ஜனனி (16). இவர் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம்போல் ஜனனி வீட்டுக்கு சென்றார். பின்னர் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு செல்வதாக தனது தம்பியிடம் கூறிவிட்டு ஜனனி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். அப்போது ஏரியில் உள்ள கிணற்றில் ஜனனி பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செஞ்சி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஜனனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ஜனனியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று அங்குள்ள செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. மேலும் ஊரில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. மது மற்றும் கஞ்சா போதையில் யாரேனும் ஜனனியை கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அப்போது கிராம மக்கள் ஜனனி சாவு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே போலீசில் கன்னியப்பன் புகார் ஒன்றை அளித்தார்.

போலீசார் விசாரணை

அதில் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜனனி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்