போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே கல்குவாரி பாறைக்குழியில் பிணமாக மிதந்த நபர் தற்கொலை செய்தாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறைக்குழிகள்
மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் கைவிடப்பட்ட கல்குவாரிகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இந்த பாறைக்குழிகளில் மழைநீர் சேர்ந்து பிரம்மாண்டமான கிணறு போல பாதுகாப்பற்ற நிலையில் ஆங்காங்கே உள்ளது. இந்த குழிகள் கடும்பாறைகளால் அமைந்துள்ளதால் மழைநீர் பூமிக்கடியில் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் கோடை காலங்களிலும் கல் குவாரி பாறைக் குழிகளில் தண்ணீர் அதிக அளவில் இருக்கும். ஒருசில பகுதிகளில் இந்த நீரை எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பலர் ஆபத்தை உணராமல் பாறைக்குழிகளில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தவறி விழுந்தாரா?
இந்தநிலையில் நேற்று நரசிங்காபுரம் பகுதியில் 60 அடி ஆழம் உள்ள ஒரு உள்ள ஒரு பாறைக்குழியில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த பொதுமக்கள் மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடுமலை தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் பிணத்தை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபருக்கு 30 முதல் 35 வயது இருக்கலாம். உடல் தண்ணீரில் ஊறி அழுகிய நிலையில் இருப்பதால் 3 நாட்களுக்கு முன் தண்ணீரில் விழுந்திருக்கலாம்.
அந்த நபர் டவுசர் மட்டுமே அணிந்திருப்பதால் குளிப்பதற்கு சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.