நீர்வழித்தட ஆக்கிரமிப்பால் ரோட்டில் வழியும் மழைநீர்

Update: 2022-11-16 16:06 GMT


மடத்துக்குளம் பகுதியில் நீர் வழித்தடங்கள் மற்றும் நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீர் வழித்தடங்கள்

இயற்கை நமக்கு வழங்கிய அருட்கொடையான மழைநீரை சேமிப்பதன் மூலம் பல்வேறு நற்பலன்களைப் பெற முடியும்.அதற்கென இயற்கையே உருவாக்கிய ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றைத் தவிர்த்து மனிதர்களால் பல நீர் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் படிப்படியாக இத்தகைய நீர் வழித்தடங்கள் அழிக்கப்படுவதும் ஆக்கிரமிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

மடத்துக்குளம் பகுதியில் பல நீர் வழித்தடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்படும் பாழாகி வருகிறது.

நோய்த் தொற்றுகள்

அந்தவகையில் மடத்துக்குளம்-கணியூர் சாலை ஓரங்களில் உள்ள பல நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.அத்துடன் சாலையின் குறுக்கே மழைநீர் வழிந்து செல்வதற்காக கட்டப்பட்டுள்ள சிறு பாலங்கள் பலவும் புதர் மண்டி பராமரிப்பில்லாமல் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகிறது. அத்துடன் கழிவுகளுடன் கலந்து பல்வேறு நோய்த் தொற்றுகள் உருவாகக் காரணமாகிறது. மேலும் பல வேளைகளில் மழைநீர் சாலைகளில் வழிந்தோடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் ஒருசிலரின் ஆக்கிரமிப்பே இதற்கு காரணமாக இருக்கக் கூடும் என்பது பலதரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே இந்த பகுதிகளில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நீர் வழித்தடங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்