மடத்துக்குளம் பகுதியில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்த நிலையில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
வார சந்தை
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை.ஆனால் மடத்துக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்த நிலையில் நேற்று காலை முதலே தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது.இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு கடும் சிரமத்தை சந்தித்தனர்.மேலும் நேற்று வார சந்தை கூட வேண்டிய நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வர முடியாத நிலையால் சந்தை முடங்கியது.
முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளமான இடங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது.அதிக அளவில் கன ரக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது தொடர்கதையாகவே உள்ளது.இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
விபத்துக்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தேங்கியுள்ள மழைநீரில் கனரக வாகனங்கள் செல்லும்போது மழைநீர் வேகமாக விசிறியடிப்பதால் அருகில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.மேலும் ஆடைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி பரிதாப நிலையிலேயே பலரும் இந்த பகுதியை கடந்து செல்கிறார்கள்.இந்த பகுதியில் தொடர்ந்து மழைநீர் தேங்குவதால் சேதமடைந்துள்ள சாலை பல வாகன ஓட்டிகளை தடுமாறச் செய்கிறது.கடந்த காலங்களில் மழைநீரை வெளியேற்றுகிறேன் பேர்வழி என்று சாலையோரங்களில் பள்ளம் தோண்டியுள்ளனர்.
இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பகுதியில் தேங்கும் மழைநீரால் விபத்து அபாயம் உள்ளது.பலத்த மழை காலங்களில் மட்டுமல்லாமல் சாதாரண மழைக்கே இந்த பகுதியில் மழைநீர் தேங்கி விடுகிறது.எனவே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால்கள் அமைக்கவும், பள்ளமான பகுதிகளை மேடாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.