மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவற்றை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனரக வாகனங்கள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதுதவிர காகித ஆலைகள், நூற்பாலைகள், தீவன ஆலைகள், தென்னை நார் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழில் நிறுவனங்களுக்கான மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு கொண்டு செல்லும் போது ஒருசிலர் விதிகளை மீறி, வாகனத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் அதிக அளவில் நீட்டிக் கொண்டிருக்குமாறும், அதிக உயரமாகவும் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
இவ்வாறு அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பாரம் ஏற்றப்படுவதால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் அதிக உயரத்தில் பாரம் ஏற்றும்போது மின் கம்பிகளில் உரசி தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
விபத்துகள்
குறுகலான சாலைகளில் அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் செல்லும்போது அந்த வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது.இதனால் போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாமல் பெருமளவு கால விரயமும் ஏற்படுகிறது. இதுதவிர கல், மண், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட அதிகமாக ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு ஏற்றிச் செல்லும் ஜல்லி, மண் உள்ளிட்டவை சாலைகளில் ஆங்காங்கே சிதறி பல விபத்துகளுக்கு காரணமாக மாறி விடுகிறது.
மேலும் சாலையின் தாங்குதிறனை விட அதிக எடையுள்ள வாகனங்கள் இயக்கப்படுவதால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும் அவற்றை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.