பஞ்சாப்பில் சுட்டு கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர்கள் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது

பஞ்சாப் முகாமில் சுட்டு கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர்கள் 2 பேரின் உடல்கள் சொந்த ஊர் கொண்டு வரப்படுகின்றன.

Update: 2023-04-14 00:06 GMT

தேனி,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், முகாமில் இருந்த 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். இறந்தவர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அதாவது தேனி மாவட்டம் மூணான்பட்டியை சேர்ந்த யோகேஷ்குமார் (வயது 24), சேலம் மாவட்டம் மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் (24) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது.

சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது

இந்நிலையில் ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 8.00 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், குடும்பத்தினர் ஆகியோர் மூலம் ராணுவ வாகனத்தில் யோகேஷ் குமார் உடல் மூணாண்டிபட்டிக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். இதையடுத்து முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அடக்கம் செய்ய ஏற்பாடு

இதேபோல ராணுவ வீரர் கமலேஷ் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட நிர்வாகம் செய்ய தொடங்கியது. அதன்படி வருவாய்த்துறையினர் கமலேஷ் உடல் அடக்கம் செய்வதற்காக மசக்காளியூர் சுடுகாட்டுக்கு சென்று இடத்தை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.

இருந்தாலும் கமலேஷ் உடல் எப்போது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது என்ற விவரம் எதுவும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எங்களுக்கு தகவல் வரவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

பெண் பார்க்க வர இருந்தவர்

பஞ்சாப் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட தேனியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ்குமாரின் தந்தை தந்தை ஜெயராஜ். விவசாயி. தாய் ரத்தினம். யோகேஷ்குமாருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். யோகேஷ்குமார் கல்லூரி படிப்பை முடித்ததில் இருந்தே, இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நண்பர்களுடன் சேர்ந்து உள்ளூரில் பயிற்சி எடுத்து வந்தார். இவரது விடா முயற்சியால் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

யோகேஷ் குமாருக்கு திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும், எப்போது ஊருக்கு வருவாய் என்று அவரது பெற்றோர் கேட்டு கொண்டே இருந்தனர். அதற்கு யோகேஸ்வரன் இந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் இறந்த செய்தி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. பெண் பாா்க்க வருகிறேன் என்றவர் இன்று பிணமாகி விட்டாரே என்று அவர்கள் உருக்கமாக கூறினர்.

குடும்பத்தினர் சோகம்

உயிரிழந்த சேலம் ராணுவ வீரர் கமலேஷின் தந்தை ரவி. நெசவு தொழிலாளி. தாய் செல்வமணி. அண்ணன் சந்தோஷ். கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கமலேஷ் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேஷின் மரணம் அவரது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அவரது அண்ணன் சந்தோஷ் உருக்கமாக கூறுகையில், கமலேஷ் பள்ளியில் படிக்கும் போதே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று கூறி வந்தான். அவனது நோக்கமும் அதுவாகத்தான் இருந்தது. அதன்படியே கல்லூரி முடித்துவிட்டு இந்திய ராணுவத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்தான். கடந்த 1½ மாதத்துக்கு முன்புதான் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு சென்றான். நான் சென்னையில் இருந்து தம்பியை வழிஅனுப்பி வைத்தேன். இன்று எங்களை விட்டு தம்பி சென்று விட்டான். தம்பியின் இறப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் தகவல் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு சந்தோஷ் அழுதபடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்