குன்னூர் விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரில் தகனம்
குன்னூர் அருகே விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவர்களின் உடல்களுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் ஊட்டிச்கு தனியார் பஸ்சில் சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பியபோது குன்னூர் அருகே மலைப்பாதையில் பஸ் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தனித்தனி ஆம்புலன்சில் சொந்த ஊர்கள் நோக்கி கொண்டுவரப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக சாலை மார்க்கமாக நேற்று முன்தினம் இரவு 1.30 மணி அளவில் கடையம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பெண்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.
பின்னர் இவர்களின் உடல்கள் வீட்டின் அருகே கொண்டு செல்லப்பட்டு கடையத்தை சுற்றியுள்ள இடுகாட்டில் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த இருவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல் பாபநாசம் அகஸ்தியர்புரம் பகுதிக்கு ஒருவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவர்கள் உடல்களும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.