திருவேங்கடமுடையான் கோவிலில் தெப்ப உற்சவம்

காரைக்குடி அருகே உள்ள திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2022-06-18 18:04 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ள திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

வைகாசி பெருந்திருவிழா

காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினந்தோறும் இரவு ஹம்சவாகனம், சிம்ம வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், சொர்ணகருட வாகனம், வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், வெள்ளி மஞ்சனம், சொர்ணகுதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த 11-ந்தேதி மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

தெப்ப உற்சவம்

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 14-ந்தேதி மாலை நடைபெற்றது. மறுநாள் கோ ரதம் நிகழ்ச்சியும், 16-ந்தேதி வெள்ளி ரதம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக பங்களா தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக தெப்பக்குளம் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இரவு 9.40 மணிக்கு தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளினார். அதிர் வேட்டுக்கள் மற்றும் வாண வேடிக்கைகள் முழங்க அதன் பின்னர் தெப்ப உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளை கோவிந்தா, கோவிந்தா என கரகோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

பூப்பல்லக்கு நிகழ்ச்சி

நேற்று காலை பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மரக்குதிரை கண்மாய்க்கரைப்பட்டி மண்டகப்படிதாரர் சார்பில் பல்லக்கும், நாளை குடிகாத்தான்பட்டி பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடாசலம் செட்டியார் தலைமையில் கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்