கொடைக்கானலில் படகு அலங்கார போட்டி

கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் படகு அலங்கார போட்டி நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை படகு முதலிடத்தை பிடித்தது.

Update: 2023-06-01 19:00 GMT


சுற்றுலாத் துறை சார்பில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்று காட்சிப்படுத்தப்பட்ட படகை படத்தில் காணலாம்.



'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கோடைவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் 7-வது நாளான நேற்று, படகு அலங்கார போட்டி நடந்தது.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு துறை சார்ந்த அலங்கார படகுகள் அணிவகுத்தன. இதில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பதாகை, செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் மாதிரி ஆகியவை படகில் காட்சிபடுத்தப்பட்டது.

இதேபோல் சுற்றுலாத்துறை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டில் காளையை அடக்குவது போன்றும், தோட்டக்கலை துறை சார்பில் மலர்களால் ஸ்பைடர் மேன் போன்றும் படகுகளில் பொம்மைகள் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

அரசின் திட்டங்கள்

இதேபோல் மீன்வளத்துறை சார்பில் அரசின் திட்டங்கள் குறித்த மாதிரி பொம்மைகள் படகில் வைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது. இந்த படகு அலங்கார போட்டியை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நட்சத்திர ஏரியில் அலங்கரிக்கப்பட்ட படகுகள் வலம் வந்தன. அவற்றை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் படகு அலங்கார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அலங்கரிக்கப்பட்ட படகு முதல் பரிசை தட்டிச்சென்றது. சுற்றுலாத்துறை படகு 2-ம் பரிசையும், தோட்டக்கலைத்துறை படகு 3-ம் பரிசையும் கைப்பற்றியது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் சுற்றுலா அலுவலர்கள் பரிசுகளை வழங்கினர். காளையை அடக்குவது போன்று சுற்றுலாத்துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட படகு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

---


Tags:    

மேலும் செய்திகள்