விசைப்படகு-வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குளச்சல் கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால் விசைப்படகு, வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்கச் ெசல்லவில்லை.

Update: 2023-03-13 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால் விசைப்படகு, வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்கச் ெசல்லவில்லை.

சூறைக்காற்று

குளச்சலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்கள். விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்புகின்றன. அவ்வாறு செல்லும் விசைப்படகுகளில் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும்.

வள்ளங்கள் காலையில் கரையையொட்டிய கடல் பகுதிகளில் மீன்கள் பிடித்து விட்டு மதியம் கரைக்கு திரும்புவது வழக்கம்.

தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசன் காலமாகும். ஆனால், கடந்த சில நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது.

மீன்பிடிக்கச் செல்லவில்லை

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீன்பிடித்து கரை திரும்பிய விசைப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்களும் பாதியிலேயே கரை திரும்பினர். அந்த விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் சூறைக்காற்று காரணமாக வள்ளம் மீனவர்கள் பலத்த காற்று காரணமாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

குறைவான மீன்கள்

ஒரு சில வள்ளங்கள் மட்டும் மீன் பிடிக்கச் சென்றன. அவற்றில் குறைவான மீன்களே கிடைத்தன. இதனால் நேற்று குளச்சல் துறைமுகத்துக்கு மீன் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்