பா.ம.க.வினர் உண்ணாவிரதம்

Update: 2023-04-12 19:30 GMT

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 25 குடும்பத்தினர் பட்டா இல்லாமல் உள்ளதாகவும், அவர்களின் பட்டா கிராம கணக்கில் குடியிருக்கும் வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஊர் பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100 வயது பாட்டிைய கட்டிலுடன் தூக்கி கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தபடியே உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க செய்தனர். இதற்கு பா.ம.க. ஒன்றிய துணைச்செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பு தலைவர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ். பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், காடையாம்பட்டி தாசில்தார் தமிழரசி, மண்டல துணை தாசில்தார் ரங்கநாதன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பட்டா மாறுதலுக்கு முன்பு உள்ள ஆவணங்களை எடுத்து சம்பந்தப்பட்ட இடத்தின் நிலை அறிந்து பட்டா கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்