நாமக்கல் மாவட்ட அரசு ரத்த மையங்களுக்கான புதிய நடமாடும் ரத்த சேகரிப்பு மற்றும் போக்குவரத்து வாகனம் தனியார் வங்கியின் நன்கொடையின் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் எந்த இடத்திலும் வாகனத்தை நிறுத்தி அங்கேயே ரத்த கொடையாளரிடம் ரத்தம் சேகரிக்க முடியும். இதற்கான தனியான இடவசதியோ. உபகரணங்களை சுமந்த செல்ல வேண்டிய அவசியமோ இருக்காது. சுலபமாகவும், பாதுகாப்பாகவும் ரத்த யுனிட்டுகளை சேகரித்து ரத்த மையத்தில் பாதுகாக்க முடியும். ரத்த மையங்களுக்கான இந்த வாகன வசதியினால் சேகரிக்கும் ரத்த யுனிட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரத்தம் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி மற்றும் டாக்டர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.