டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை முனியைய்யா கோவில் அருகில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி அருகில் அமைந்துள்ள இந்த கடையை அரசின் உத்தரவின்படி அகற்ற உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்த நிலையில் இதுவரை அகற்றப்படவில்லை. இதன்காரணமாக உடனடியாக மதுக்கடையை மூடக்கோரி அப்துல் கலாம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் டாஸ்மாக் கடை முன்பு நேற்று காலை திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் வரும் 7-ந் தேதி கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளதாகவும், கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.