காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றகோரி நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் அனைத்து லாரிகளையும் நிறுத்தி விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Update: 2022-11-07 21:33 GMT

நாமக்கல்,

தமிழ்நாடு மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பு தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் 537 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் மாநில அரசின் அறிக்கையின்படி 23 சுங்கச்சாவடிகள் தேவையில்லாமல் இயக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 8 சுங்கச்சாவடிகள் காலாவதியான போதும் பல ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.

காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணத்தை செலுத்த லாரி உரிமையாளர்கள் தயாராக உள்ளனர் என்பதை பலமுறை மத்திய அரசுக்கு தெரிவித்தும், இதுவரை செவிசாய்க்கவில்லை.

முற்றுகை போராட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். 3-ம் நபர் காப்பீட்டு பிரீமியம் கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்துள்ள 11 நிறுவனங்களிடம் இருந்து ஒளிரும் பட்டையை வாங்கி பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

நாமக்கல் கீரம்பூரில் உள்ள சுங்கச்சாவடி முன்பு அனைத்து லாரி மற்றும் வாகனங்களை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதை ஒரு சில நாட்களில் அறிவிக்க உள்ளோம். அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்களை அழைத்து பேசி, விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்