பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ. தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ. தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
"தமிழ் இலக்கியங்களை கசடற கற்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், அந்தப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களின் தமிழ் இலக்கியப் படிப்புக்கு தடை போடும் இத்தகைய செயல்கள் ஏற்க முடியாதவை.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என ஏறக்குறைய 50 கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியம் பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்பின் சிறப்புகளில் ஒன்று, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியங்களை மட்டுமே பாடமாகக் கொண்டது என்பது தான். ஆனால், இப்போது மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ் இலக்கியம் தொடர்பான 8 பாடத்தாள்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இது தமிழுக்கு செய்யும் அநீதியாகும்.
முழுக்க, முழுக்க தமிழ் இலக்கியங்களைப் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட பி.லிட் படிப்பில், இந்தப் படிப்புக்கு சற்றும் பொருத்தமற்ற பாடங்கள் திணிக்கப்படுவது ஏன்? என்று உயர்கல்வி வட்டாரங்களில் விசாரித்த போது தான் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் தெரியவந்தன. தமிழ்நாட்டில் பி.லிட் படிப்பு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பெயர்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது. வித்துவான் படிப்பு, புலவர் படிப்பு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இந்தப்படிப்பு, 1980&81 ஆம் ஆண்டு முதல் பி.லிட் என்ற பெயரில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தப் படிப்பை அரசு வேலைவாய்ப்புகளில் பி.ஏ தமிழ் இலக்கியத்திற்கு இணையான படிப்பாக தமிழக அரசு ஏற்பதில்லை என்றும், அதனால் தான் பி.லிட் படிப்பில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் படிப்பை சேர்த்து பி.ஏ தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாக மாற்ற ஆணையிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பி.லிட் படிப்பு என்பது பி.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பை விட இலக்கியத் தரமும், செழுமையும் நிறைந்தது ஆகும். அப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் தமிழின் செவ்வியல் நூல்களான தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் தொடங்கி சமகாலம் வரையிலான இலக்கியங்களும், வரலாற்றியல், கல்வெட்டியல், சுவடியியல், மொழி வரலாறு, மொழிபெயர்ப்பியல் போன்றவையும் சேர்க்கப் பட்டுள்ளன.
அரசு வேலைவாய்ப்புகளின் போது பி.ஏ தமிழ் இலக்கியத்திற்கு இணையான பட்டப்படிப்பாக பி.லிட் படிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது தான் சிக்கல் ஆகும். பி.லிட் படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானது தான் என்று அறிவித்தாலே போதுமானது. அதை விடுத்து பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தில் இந்தப் படிப்புக்கு தொடர்பில்லாத பாடங்களைச் சேர்த்து, இந்தப் படிப்பை பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாக மாற்ற நடந்த முயற்சிகள் தான் சிக்கலுக்கு காரணமாகும்.
பி.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பும், பி.லிட் படிப்பும் முற்றிலும் மாறுபட்டவை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் பி.ஏ. தமிழ் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் பி.லிட் படிப்பையும் பி.ஏ தமிழ் இலக்கியமாக மாற்ற வேண்டிய தேவையில்லை. பி.லிட் படிப்பு தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமே தமிழ் இலக்கியங்களையும், அதன் தொன்மையும் மாணவர்களுக்கு கற்றுத் தருவது தான்.
இந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், பி.லிட் படிப்பை பி.ஏ தமிழ் இலக்கியப் படிப்பாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பி.ஏ தமிழ் இலக்கியத்தில் இலக்கியங்கள் குறித்து முழுமையாக கற்றறிய முடியாது. அதற்கு காரணம், அந்தப் படிப்பில் உள்ள 24 பாடத்தாள்களில் 16 பாடத்தாள்கள் மட்டும் தான் தமிழ் இலக்கியம் தொடர்பானவை; மீதமுள்ள 8 தாள்கள் பொதுத் தமிழ் மற்றும் ஆங்கிலத் தாள்கள் ஆகும். ஆனால், பி.லிட் படிப்பில் மொத்தமுள்ள 24 தாள்களும் தமிழ் இலக்கியம் தொடர்பானவை என்பது குறிபிடத்தக்கது.
எனவே, பி.லிட் படிப்புகளில் சிறப்புகளையும், அது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களையும் புரிந்து கொண்டு, பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதியாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்."
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.