ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு'

திருப்பூரில் ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு' நிகழ்ச்சியில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Update: 2023-07-09 12:30 GMT

மகிழ்ச்சியான ஞாயிறு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'மகிழ்ச்சியான ஞாயிறு' என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி திருப்பூரில் முதல்முறையாக கடந்த மாதம் 11-ந்தேதி மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.நகரில் நடைபெற்றது. இந்த நிலையில் 2-வது 'மகிழ்ச்சியான ஞாயிறு' நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 60 அடி ரோடு கண்ணகி நகரில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் வாழ்த்தி பேசினார். இதில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தனிச்சிறப்பு

திருப்பூருக்கும், திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றிற்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கடல் அலையா அல்லது மக்கள் தலையா என்று சொல்லும் அளவிற்கு இன்று மக்கள் கூடி உள்ளீர்கள். உழைப்புக்கு பெயர்போன திருப்பூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிய அளவில் இல்லை. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும், இதில் கலந்து கொள்பவர்கள் மனஅழுத்தம் நீங்கி, புத்துணர்வுடன் கடந்து செல்ல வேண்டும் என்பதாகும்.

மேலும் நம்முடைய கலை மற்றும் கலாசாரத்தை உள்ளூரை சேர்ந்த கலைஞர்கள் மூலமாகவே பொதுமக்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச்செல்லவும், அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கும்மியாட்டம்-வள்ளியாட்டம்

மேலும் தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான கும்மியாட்டம், வள்ளியாட்டம், சலங்கையாட்டம், சிலம்பம் ஆகியவை பொதுமக்களை மிகவும் கவர்வதாக அமைந்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்