இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்

இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்

Update: 2023-03-15 18:45 GMT

கோவை

இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டியவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆபாசமாக சித்தரித்து படம்

கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். தற்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகிறேன். கடந்த மாதம் 6-ந் தேதி எனது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு ஒரு தகவல் வந்தது. அதில் "உன்னுடைய ஆபாச படங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் ஆபாச படங்கள் ஏராளமாக என்னிடம் உள்ளது. அந்த படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும்" என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. நான் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.

2 நாட்களுக்கு பின்னர் வேறு ஒரு இன்ஸ்டாகிராம் முகவரியில் இருந்து பணம் தர முடியுமா? முடியாதா? என கூறப்பட்டு இருந்தது. உடனடியாக ரூ.1,500 பணத்தை அனுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் சிறிது நேரத்தில் நிர்வாண படம், உனக்கு வரும் என கூறப்பட்டு இருந்தது.

அதேபோல் அந்த நபர் வேறு முகவரியில் இருந்து மார்பிங் செய்யப்பட்ட எனது நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். இதனை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

குடும்ப பெண்கள் படம்

அடுத்த நாள் அந்த நபர் வேறு ஒரு முகவரியில் இருந்து எங்களது குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை எப்படியோ திருடி எங்களது குடும்ப பெண்களின் புகைப்படங்களை நிர்வாணமாக மார்பிங் செய்து எனக்கு அனுப்பி மீண்டும் மிரட்டினார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.இந்தநிலையில் மீண்டும் என்னை தொடர்பு கொண்ட அந்த மர்மநபர் தனக்கு ரூ.18 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. அதனை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் என்னுடைய புகைப்படம் மற்றும் எனது குடும்ப பெண்களின் நிர்வாண ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி கொலைமிரட்டல் விடுக்கிறார்.

எனவே என்னுடைய புகைப்படங்களை நிர்வாணமாக மார்பிங் செய்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிவு

புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கும் நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

Tags:    

மேலும் செய்திகள்