அதியமான் கோட்டையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நிறுத்தம்
அதியமான் கோட்டையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
புகழூர் தாலுகா வேட்டமங்கலம் ஊராட்சி அதியமான் கோட்டையில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் புகழூர் காகித ஆலையில் இருந்து முத்து நகரில் உள்ள 2½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அதியமான் கோட்டைக்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த 18 மாதங்களாக இப்பகுதியில் இருந்து குடிநீர் வழங்கப்படவில்லை. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வேட்டமங்கலம் ஊராட்சி மூலம் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட மின் மோட்டார் தண்ணீரில் அடித்து சென்று விட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காகித ஆலை மூலம் குடிநீர் இணைப்புகள் இருந்தும் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அதியமான் கோட்டையில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்போவதாக அதியமான் கோட்டை பொதுமக்கள் அறிவித்து இருந்தனர். இந்தநிலையில் புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் அதியமான் கோட்டைக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க காகித ஆலை அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒரு வார காலத்திற்குள் காகித ஆலை மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.