கரும்பு விவசாயிகளின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ரத்து

கரும்பு விவசாயிகளின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ரத்து

Update: 2022-08-14 19:42 GMT

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருந்த கரும்பு விவசாயிகளின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

கரும்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு நடப்பு ஆண்டு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காததால் சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் தமிழகஅரசை கண்டித்து அறிஞர் அண்ணா கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சுதந்திர தினமான இன்று (திங்கட்கிழமை) அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு தேசியக்கொடியை ஏற்றி வைத்துவிட்டு, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி வழங்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவற்றில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுதந்திர தினத்தன்று நடைபெறுவதாக இருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மணிகண்டன் முன்னிலையில் நடந்தது. இதில் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் துரை.பாஸ்கரன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பிரபாகரன், துரைராஜ், ராஜா மற்றும் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக அறிஞர் அண்ணா கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உறுதி அளித்ததுடன், அதற்கான படிவத்தில் கையெழுத்தும் போட்டு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவுற்றது.

Tags:    

மேலும் செய்திகள்