'இந்தியா' கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பழனி வருகையை கண்டித்து ‘இந்தியா' கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். கவர்னரை வரவேற்க வந்தபோது மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2023-08-24 19:30 GMT

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை பழனிக்கு வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி மயில் ரவுண்டானா பகுதியில் 'இந்தியா' கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ் மண்டல தலைவர் வீரமணி, நகர தலைவர் முத்துவிஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் கவர்னர் செயல்படுவதாகவும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கருப்புக்கொடி காட்டியும் கோஷம் எழுப்பினர்.

சாலை மறியல்

அப்போது திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலுக்கு முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் ஆர்ப்பாட்டம் செய்த 'இந்தியா' கூட்டணி கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்று, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதில் 'இந்தியா' கூட்டணி கட்சியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 93 பேரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பா.ஜ.க.வினர் கைது

இதற்கிடையில் கவர்னரை வரவேற்பதற்காக திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் பழனி பஸ்நிலையம் அருகில் திரண்டனர். அப்போது, வரவேற்பு அளிக்க அனுமதி இல்லை என போலீசார் பா.ஜக.வினரிடம் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

அதையடுத்து பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்டோரை வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது துணை சூப்பிரண்டு சரவணனை பா.ஜ.க.வினர் தள்ளிவிட்டனர். உடனே போலீசார் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 117 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.

பழனி பஸ்நிலைய பகுதியில் 'இந்தியா' கூட்டணி, பா.ஜ.க.வினர் அடுத்தடுத்து செய்த மறியல் மற்றும் தள்ளுமுள்ளு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்