பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது - இந்திய கம்யூனிஸ்டு கட்சி

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.;

Update: 2023-08-07 09:24 GMT

சென்னை,

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை (04.08.2023) இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக செயல்படலாம் என இன்று மக்களவைச் செயலகம் (07.08.2023) அறிவித்திருக்கிறது.

ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை விசாரித்த சூரத் பெருநகர நீதித்துறை நடுவர்மன்றம் மார்ச் 23 ஆம் தேதி வழங்கிய தண்டனை அதீதமானது. உள்நோக்கம் கொண்டது என்பதையும், இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவிற்கு நேர்மையான முறையில் நியாயம் வழங்கப்படவில்லை என்றும் கருத்துகள் வெளியாகியிருப்பது பாஜக ஒன்றிய அரசின் பழிவாங்கும் அரசியலின் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்