பா.ஜ.க.வினர் நூதன மனு
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் நூதன மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிலையில் பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் நூதன முறையில் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும், இதுவரை தாங்கள் அளித்த மனுக்களுக்கு நடவடிக்கை இல்லை எனவும், அதனால் இதனை வலியுறுத்தும் வகையில் வெற்று காகிதத்தை மனு அளிப்பதாக கூறி, எதுவும் எழுதப்படாத வெள்ளைத்தாளை மனுவாக கொடுத்தனர். இதேபோல அ.தி.மு.க. தெற்கு நகர செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியில் போதுமான வகுப்பறை இல்லாததால் நகர்மன்ற வளாகத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிற நிலையில், அங்கு பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், மாணவர்களுக்கு வகுப்பறைகள் அமைக்க கலெக்டர் சிறப்பு நிதி பெற்று அல்லது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிதியில் கட்டிடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.