நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாரா? சீமான் சவால்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாரா? என்று சீமான் சவால் விடுத்துள்ளார்.
திருச்சி:
கோர்ட்டில் ஆஜர்
கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ம.தி.மு.க.வினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். இதேபோல் ம.தி.மு.க.வினரும் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
இந்த வழக்கு தொடர்பாக ம.தி.மு.க.விற்கும், எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளன. இதற்கு எல்லாம் குண்டாஸ் இல்லையா?. சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் யூ டியூபர்கள் மீது தி.மு.க. அரசு வழக்குகள் பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது.
பேரறிவாளன் விடுதலையை கொண்டாடவில்லை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த பலர் தண்டனை காலம் முடிந்தும் நீண்ட காலமாக விடுதலை செய்யப்படாமல் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு காரணம் கியூ பிரிவு போலீசார். எனவே சிறப்பு முகாம் மற்றும் கியூ பிரிவை கலைக்க வேண்டும். பேரறிவாளன் விடுதலையை நாங்கள் எந்த வகையிலும் கொண்டாடவில்லை.
பா.ஜ.க.வால்தான் அ.தி.மு.க. வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று பொன்னையன் கூறிய கருத்தை மதிக்கிறேன், வரவேற்கிறேன். பா.ஜ.க. பெரிய கட்சி என்றால், எங்களை போன்று வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா?. மலையை உடைத்து எம்.சாண்ட் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். மலையை அழித்தால் மீண்டும் உருவாக்க முடியுமா?. இதற்கெல்லாம் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏன் கேள்வி எழுப்பவில்லை.
தேர்வு எழுத வேண்டும்
ரபேல் ஊழல் விவகாரத்தில் பாதுகாப்பு துறையிடம் உயர்நீதிமன்றம் கோப்புகள் கேட்டபோது, அனைத்தும் காணாமல் போனது என்று அந்த துறை கூறியது. இவர்கள் எப்படி நாட்டை பாதுகாப்பார்கள். நீட் போன்று எத்தனை தேர்வுகளை கொண்டு வருகிறார்கள். ஏன் நாட்டை ஆளும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் தேர்வு எழுதக்கூடாது?. ஒவ்வொரு துறைகளிலும் தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டும்தான் அரசியல் தலைவர்களாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.