அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பா.ஜ.க.- வி.சி.க.வினரிடையே தள்ளுமுள்ளு

திண்டிவனத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பா.ஜ.க.-வி.சி.க.வினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Update: 2023-04-14 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் ரோஷனை காலனியில் அம்பேத்கர் சிலை உள்ளது. அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று காலை வந்தனர்.

இதற்கு ரோஷனை பகுதியை சேர்ந்த திண்டிவனம் மேற்கு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் விருஷபதாஸ் மற்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தள்ளுமுள்ளு

அப்போது, அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்க கூடாது என்றும், உடனடியாக இங்கிருந்து செல்லுமாறும் வி.சி.க.வினர் கூறினர். அப்போது ரோஷனை பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி வீரமணி, அனைவருக்கும் அம்பேத்கர் பொதுவானவர். எங்களை தடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாங்கள் முறையாக அனுமதி பெற்றுதான் மாலை அணிவிக்க வந்துள்ளோம் என்றார்.

இதனால் பா.ஜ.க.வினருக்கும், வி.சி.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. ஒருவரையொருவர் கைகளால் நெட்டி தள்ளிக்கொண்டனர்.

பரபரப்பு

இது பற்றி தகவல் அறிந்ததும் ரோஷனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் விரைந்து வந்து இரு கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், கோஷமிடாமல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினர். இதையடுத்து பா.ஜ.க.வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்