தடையை மீறி தர்காவுக்கு செல்ல முயன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கைது

தடையை மீறி கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் சித்திக், வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-12-10 22:45 GMT

மதுரை,

பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் சித்திக், தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில தலைவர் டெய்சி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மதுரை வந்திருந்தனர். அவர்கள் புதூர் பகுதியில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாலையில் தேசிய தலைவர் சித்திக், செயலாளர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி போலீசார் அவர்கள் தர்காவிற்கு செல்ல தடை விதித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தடையை மீறி அவர்கள் தர்காவிற்கு செல்ல முயன்றனர். அவர்களை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடை மீறி செல்ல முயன்ற அவர்களை புதூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு முன்பு பா.ஜ.க. தொண்டர்கள் குவிந்தனர். கைதானவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்