அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி -ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-09-25 23:14 GMT

சென்னை,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபயணத்தை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியது. அதன் பேரில் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.துறை, சிறுபான்மை பிரிவு உள்பட 8 அணிகள் சார்பில் இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபயணம் நேற்று தொடங்கியது.

இந்த பயணத்தின் தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரிகள் திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ப.சிதம்பரம் பேச்சு

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

அரசியல் சாசனத்தை வடித்தது அரசியல் சாசன நிர்ணய சபை. இதில் 389 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்து மகா சபை, பாரதீய ஜன சங்கம், பா.ஜ.க.வில் தலைவர்களாக இருந்தவர்கள் யாருமே உறுப்பினர்களாக இருந்தது கிடையாது. ஆகவே தான் பல இடங்களில் அவர்கள் இந்த அரசியல் சாசனத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்ற மேலவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாததே இதனை தடுக்கிறது. இந்த தடை மட்டும் அகன்றுவிட்டால், நிச்சயமாக அரசியல் சாசனத்தை திருத்துவார்கள், சிதைப்பார்கள், மாற்றி எழுதுவார்கள்.

சிதைக்கப்படாமல் காக்க வேண்டும்

இதனை தடுக்க நாடு முழுவதும் உணர்வு வரவேண்டும். மிருக பலம், பெரும்பான்மையை வைத்து அரசியல் சாசனத்தை திருத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அனைத்து மாநிலங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுகிற சில திருத்தங்களை தவிர வேறு எதையும் திருத்தமாட்டோம் என்று பா.ஜ.க. சொல்லட்டுமே, சத்தியம் செய்யட்டுமே செய்யமாட்டார்கள். இந்திய அரசியலமைப்பு சீரழிக்கப்படுவதை, சிதைக்கப்படுவதை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல்காந்தி பயணத்தில்...

கே.எஸ்.அழகிரி பேசும்போது, 'இந்தியாவின் அரசியல் சட்டம்தான் மக்களை பாதுகாக்கின்ற அமைப்பு. இது சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை சொல்கிறது. இதனை சிதைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். எண்ணுகிறது' என்றார்.

திக்விஜய்சிங் பேசுகையில், ''மத நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் ஒன்றாக இணைய வேண்டும். அவர்கள் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்க வேண்டும்'' என்றார்.

சல்மான் குர்ஷித் பேசுகையில், 'ராகுல்காந்தி தேச ஒற்றுமை பயணத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறார். இவ்வாறு அனைவரும் இணையும் போது, அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் உடன் நாம் போராட முடியும்'' என்றார்.

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் நிறைவு

மூவர்ணத்தில் பலூன்களை பறக்கவிட்டு இந்த பயணத்தை தலைவர்கள் தொடங்கி வைத்தனர். இந்த பயணத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் உள்பட திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று தொடங்கிய நடைபயணம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் (75 கி.மீ. தொலைவு) நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்