தமிழகத்தின் நலனில் பா.ஜனதா கவனம் செலுத்த வேண்டும்
தமிழகத்தின் நலனில் பா.ஜனதா கவனம் செலுத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
புவனகிரி,
இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறந்த ஆட்சி
தமிழகத்தில் ஒரு சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம். பா.ஜனதாவினர் எதையும் ஆக்கபூர்வமாக செய்ய முடியாது. எதிர்மறை விமர்சனங்களை செய்வார்கள். பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை பார்த்து கேட்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒரே ஒரு செங்கல் மட்டுமே வைத்திருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் செயல் வேகம் அவ்வளவுதானா? மோடியின் திறமை அவ்வளவுதானா? பா.ஜனதாவின் சக்தி அவ்வளவுதானா? மக்களுக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து செயல்படுத்தினால்தான் மக்கள் பயன்பெறுவார்கள். இதைக் கூட செய்ய முடியவில்லை.
வீர வசனம்
இதற்காக டெல்லிக்கு சென்று செல்வாக்கை நிரூபித்தால் இவர்களை நான் பாராட்டுகிறேன். இவர்கள் டெல்லிக்கு சென்றால் மோடியையும் பார்க்க முடியாது. அமித்ஷாவையும் பார்க்க முடியாது என்று எனக்கு தெரியும்.சென்னையில் அமர்ந்து கொண்டு வீர வசனம்தான் பேசுவார்கள். செயல்படுகிற அரசை செயல்படவில்லை என்றும், செயல்படாத அரசை தூக்கி பிடிப்பதும்தான் இவர்களது கொள்கையாக இருக்கிறது. தமிழகத்தின் நலனில் பா.ஜனதா கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்திற்காக அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? வந்தே மாதரம் என்ற ரெயில் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரெயில் கூட இல்லை. இதற்காக அண்ணாமலை போராட வேண்டும். தன்னுடைய நடைபயணத்தை கோபாலபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்று மோடி வீட்டின் முன்பாக செய்ய வேண்டும். இதையெல்லாம் அவர் செய்தால் அவரை நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.