எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கைதை கண்டித்து குமரியில் பா.ஜனதாவினர் சாலை மறியல்

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-11 18:23 GMT

நாகர்கோவில்,

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

எதிர்ப்பு

வேளிமலை முருகன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. தேரை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுக்க பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் உள்பட பா.ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

அதை கண்டித்து குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மார்த்தாண்டம்

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் நடத்திய மறியல் போராட்டத்துக்கு குழித்துறை நகர பா.ஜனதா தலைவர் ரெத்தினமணி தலைமை தாங்கினார். உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், கிள்ளியூர் ஒன்றிய விவசாய அணி தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டரெத்தினமணி உள்பட 55 பேரை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்தனர்.

மேல்புறம் சந்திப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் சந்திரன் தலைமையில் மறியல் நடந்தது. இதில் சரவணவாஸ் நாராயணன், பைஜு, விஜயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 111-பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

புதுக்கடை

புதுக்கடை பஸ் நிலையம் முன் பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரகுமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் புதுக்கடை பேரூராட்சி தலைவி ஜாக்குலின் ரோஸ் கலா, முன்னாள் தலைவர் மோகன் குமார், பைங்குளம் ஊராட்சித்தலைவி விஜயராணி, துணைத் தலைவர் மேரி, விளாத்துறை ஊராட்சி தலைவர் ஓமனா, துணை தலைவர் சிவகுமார், முன்சிறை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பிரபு சலா, நகர பா.ஜனதா தலைவர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

குலசேகரம் சந்தை சந்திப்பில் நடந்த மறியலுக்கு பா.ஜனதா மாவட்ட துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் திருவட்டார் ஒன்றிய தலைவர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் ஷீபா பிரசாத், இளைஞர் அணி துணைத் தலைவர் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை

தக்கலை பஸ் நிலையம் முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு விவசாய அணி மாவட்டத் தலைவர் முருகராஜன் தலைமை தாங்கினார். சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு கண்ணனாகம் பகுதியில் பா.ஜனதா சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மகுமார் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட 39 பேர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்