திருவள்ளூரில் 75 டிராக்டர்களில் தேசிய கொடியுடன் பா.ஜ.க. பேரணி
திருவள்ளூரில் 75 டிராக்டர்களில் தேசிய கொடியுடன் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினர். இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று டிராக்டரை 2 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார்.
டிராக்டர் பேரணி
75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் 75 டிராக்டர்களில் தேசிய கொடியை கட்டி பேரணி நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின்குமார் தலைமை தாங்கினார். மாநிலச்செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம், மத்திய அரசு திட்டத்தின் மாநில தலைவர் லோகநாதன், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார், மாநில மகளிர் அணி பொறுப்பாளர் மாலினி ஜெயச்சந்திரன், மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் சீத்தாராமன், மாநில நிர்வாகி கீதாஞ்சலி சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டிராக்டர் பேரணியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். அவர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் இருந்து டிராக்டரை ஓட்டிய படி 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்றார். இந்த பேரணி திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது. டிராக்டர்களில் தேச பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. பின்னர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு எல்.முருகன் மலர் தூவி மரியாதை செய்தார்.
செருப்பு வீச்சு ஏற்புடையதல்ல
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வருகிற 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். திருவள்ளுவர் மாவட்டத்தில் சுதந்திர தின 75-வது ஆண்டை குறிப்பிடும் விதமாக 75 விவசாயிகள் தங்களது டிராக்டர்களில் தேசிய கொடியை ஏற்றி பேரணி நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. செருப்பு வீச்சு என்பது வன்முறை கலாசாரம். இது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல. இதை ஒருபோதும் பா.ஜ.க. சம்மதிக்காது.
டிராக்டர் பேரணியையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரதாசன், அனுமந்தன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.