வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம்

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-13 16:57 GMT

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர், குணசேகரன் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், கருணாகரன், ரஜினி மற்றும் போலீசார் அங்கு பேரிகார்டுகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதைெயாட்டி காலை முதலே மாநகராட்சி அலுவலகம் பகுதியில் பா.ஜ.க.வினர் திரண்டனர். மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் ஜெகன், எஸ்.எல்.பாபு, மகேஷ், பொருளாளர் தீபக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம், தள்ளுமுள்ளு

அப்போது அவர்கள் மாநகராட்சியின் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மாநகராட்சி அலுவலக கேட் மூடப்பட்டது. பா.ஜ.க.வினர் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேரிகார்டுகளை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனினும் அவர்கள் பேரிகார்டுகளை தாண்டி மாநகராட்சி அலுவலகம் உள்ளே நுழைய செல்ல முயன்றனர். அப்போது கேட் பகுதியில் ஏராளமான போலீசார் அவர்களை தடுத்தனர். எனினும் அவர்கள் கேட்டினை தாண்டி மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்தனர். பின்னா் அவா்கள் மேயர் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேரை ேபாலீசாா் கைது செய்தனர். அவர்கள் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பார்வையிட்டார்.

மண்டபத்துக்கு பூட்டு

தனியார் திருமண மண்டபத்தில் அவர்களை அடைத்த பின்னர் மண்டபத்தினை போலீசார் பூட்டு போட்டு பூட்டினர். அப்போது பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. மண்டபத்தின் வெளியே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினரை போலீசார் விரட்டினர். அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்களையும் போலீசார் அங்கிருந்து விரட்டினர்.

இதனிடையே அங்கு வந்த பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள் மண்டபத்துக்குள் உள்ள நிர்வாகிகளிடம் பேச முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து அங்கிருந்து விரட்டினர். அப்போதும் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்