பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 13 இடங்களில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 13 இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூரமங்கலம்:
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சேலம் சூரமங்கலம் மண்டல பா.ஜனதா சார்பில் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.
மண்டல தலைவர் கண்ணன், முன்னாள் மண்டல தலைவர் சீனிவாசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மண்டல துணைத்தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பால், மின்சாரம், சொத்து வரி உயர்வுகளை கண்டித்தும் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் கோஷமிடப்பட்டன. இதில் மண்டல பொதுச்செயலாளர் அருண், சிவதாபுரம் பகுதி மண்டல தலைவர் பாலமுருகன், பொதுச்செயலாளர் சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
13 இடங்களில்.....
இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபேட்டை, அழகாபுரம், கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி, மன்னார்பாளையம் பிரிவு ரோடு என மாநகரில் 13 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.