கூடலூரில் பா.ஜ.க.வினர் ஊர்வலம்

சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-02 15:01 GMT

கூடலூர், 

சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க.வினர் ஊர்வலம்

தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசுகளுக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்கியது. ஆனால், தமிழக அரசு இதுவரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் கூடலூர் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் நேற்று பா.ஜ.க.வினர் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. தொடர்ந்து ராஜகோபாலபுரம், பழைய, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று காந்தி திடலை அடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கடையடைப்பு போராட்டம்

பின்னர் காந்தி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் மோகன்ராஜ், நகர தலைவர் ரவி, மகளிர் அணி நிர்வாகி நளினி, வக்கீல் பரசுராமன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் மெக்கானிக் கடை வைத்து உள்ளவர்கள், இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்