சிதம்பரம் அருகே பரபரப்பு பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிதம்பரம் அருகே பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-12 17:33 GMT

பரங்கிப்பேட்டை, 

பெட்ரோல் குண்டு வீச்சு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒட்டக்கார மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரை முருகன் (வயது 48). பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று  நள்ளிரவு தாமரை முருகன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் பயங்கர சத்தத்துடன் வெடித்த பெட்ரோல் குண்டால், காரின் பின்பக்க டயரில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

மின்னல் வேகத்தில் தப்பிய மர்மநபர்கள்

இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த தாமரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதை அறிந்த மர்மநபர்கள் உடனே அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதற்கிடையே தாமரை முருகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதில் காரின் பின்பக்க டயர் மட்டும் எரிந்து சேதமானது.

இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் ஆகியோர் தலைமையில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சேவராமன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெட்ரோல் குண்டு வீச்சில் சேதமடைந்த காரை பாா்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோத தகராறில் யாரேனும் பா.ஜ.க. நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்