பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வின் வீட்டை முற்றுகையிட முயற்சி

காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ எழிலரசன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-11-04 22:45 GMT

காஞ்சீபுரம் கீழ்க்கதிர்பூர் பகுதியில் ரேஷன் கடையை திறந்து வைத்த காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும். தி.மு.க. மாணவரணி செயலாளருமான ஏழிலரசனிடம் பெண்கள் சிலர், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு எம்.எல்.ஏ. எழிலரசன், பிரதமர் மோடி அறிவித்த ரூ.15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் வந்துவிட்டதா? என திருப்பிகேட்டார்.

இதையடுத்து பிரதமர் மோடியை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக கூறி காஞ்சீபுரம் பா.ஜனதா கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். எம்.எல்.ஏ. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.ஆனால் எம்.எல்.ஏ. தரப்பில் மன்னிப்பு தெரிவிக்காததால் பா.ஜனதா கட்சியினர் எம்.எல்.ஏ. எழிலரசனின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 33 பெண்கள் உள்பட 162 பா.ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் எம்.எல்.ஏ. எழிலரசன் வீட்டுக்கும், காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல பட்டு சேலை விற்பனை கடைக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது. போலீசார் பட்டு சேலை கடை மற்றும் எம்.எல்.ஏ. வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்