பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், பழனியில் தமிழக அரசை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
பா.ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத்ரெட்டி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட செயலாளர்கள் துரைக்கண்ணன், புதுமைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அன்னிய மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் சங்க தமிழ் இலக்கியங்களை பாடமாக சேர்க்க வேண்டும். பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் நிகழ்வுகளை நடத்த வேண்டும். தமிழ் இலக்கிய நூல்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
பழனியில் ஆர்ப்பாட்டம்
இதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் கவிதாசன், மாவட்ட பார்வையாளர் ராஜபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.