கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கண்மாயில் பா.ஜ.க.வினர் திரண்டதால் பரபரப்பு
நிலக்கோட்டை அருகே கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கண்மாயில் பா.ஜ.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சியில் கல்கோட்டை கண்மாய் உள்ளது. இதன் அருகே, ஊறுகாய் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் நாகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் அருள்மணி, நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அந்த கட்சியினர் கண்மாய்க்கு திரண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் பாரதீய ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து இன்னும் ஒரு மாத காலத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷங்களை எழுப்பியபடி பாரதீய ஜனதா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.