கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்ற அண்ணாமலையை தடுத்து நிறுத்திய வாலிபர்கள்

வாக்குவாதம் செய்த வாலிபர்களிடம் பேசிய அண்ணாமலை, அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது என தெரிவித்தார்.;

Update: 2024-01-09 06:02 GMT

தர்மபுரி:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக `என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் பி.பள்ளிபட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள், அண்ணாமலையை ஆலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர். அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு கோஷம் எழுப்பினர். அப்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர்.

இதனால் அங்கு அண்ணாமலைக்கும், கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்றும், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.

'இலங்கையில் 2009-ல் கலவரம் நடந்தது. அங்கு தமிழர்கள் இறந்தபோது யாரும் கேட்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் தி.மு.க.வினர் பேசுவதுபோல் பேசக்கூடாது. அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது. மேலும் ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா?' என்று தடுத்து நிறுத்தியவர்களிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் ஆலயத்துக்குள் சென்ற அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்