இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
நாகை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 5 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 5 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க.வினர் போராட்டம்
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் செப்டம்பர் 11-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி நாகையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஒன்று கூடினர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
85 பேர் கைது
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டபடி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் பெற்றிவேல் தவறி கீழே விழுந்தார்.
இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட பொது செயலாளர்கள் பாலச்சந்திரன், ராஜேந்திரகுமார், மாவட்ட பொருளாளர் ரகுநாதன், நகர தலைவர் சுந்தர் என 5 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.