மத்தியில் பா.ஜ.க. இனியும் ஆட்சி செய்வது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல
மத்தியில் பா.ஜ.க. அரசு, இனியும் ஆட்சி செய்வது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல என ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.;
ராமேசுவரம்
பொதுக்கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மீனவர் பிரிவு சார்பில் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு மத்திய பா.ஜனதா. அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை தாங்கினார். நகர் தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்று பேசினார்.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், கோட்டைமுத்து, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தன், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரெங்கநாதன், செந்தாமரைகண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட துணை சேர்மன் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விலைவாசி உயர்வு
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
நாட்டில் எந்த ஒரு குடும்பத்திலும் பொருளாதார நிலை சரியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடன் வாங்காத குடும்பமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 42 சதவீதம் வேலையின்மை உள்ள நிலையே இருந்து வருகின்றது. விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 7.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி பா.ஜ.க. ஆட்சியில் 5.7 சதவீதமாக உள்ளது.
10 ஆண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு, இனியும் ஆட்சி செய்வது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல.
நடைபயணத்தின் நோக்கம்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டதன் நோக்கமே அனைத்து மத மக்களும் சகோதரத்துடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றுதான்.
மணிப்பூரில் கடந்த 150 நாட்களாக கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இவ்வளவு நடந்தும் அந்த பகுதிக்கு பிரதமர் ஒரு முறை கூட செல்லவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜ.க. அரசை வெளியேற்றி, காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரும் பட்சத்தில், ஆட்சிக்கு வந்த இரண்டு வருடத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அரசியலில் சட்டத்திருத்தம் செய்து அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மீனவர்களுக்கு தனி வாரியம்
கூட்டத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பேசுகையில், "மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த வரையிலும் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் படகுகள் ஏதும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படவில்லை. படகுகளுக்கும் மீனவர்களுக்கும் எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படவில்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கின்றது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு வாக்களித்தால் கண்டிப்பாக மீனவர்களுக்கு தேவையான அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும். மீனவர்களுக்கு தனி வாரியமும் கொண்டுவரப்படும் என்று கூறினார்.