அரசு திட்டங்களில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறதா?- மத்திய இணை மந்திரி கவுசல் கிஷோர் விளக்கம்

அரசு திட்டங்களில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறதா? என்று மத்திய இணை மந்திரி கவுசல் கிஷோர் விளக்கம் அளித்து உள்ளார்.

Update: 2022-10-12 20:39 GMT


அரசு திட்டங்களில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறதா? என்று மத்திய இணை மந்திரி கவுசல் கிஷோர் விளக்கம் அளித்து உள்ளார்.

ஆய்வு

மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் பணிகள் குறித்து, மத்திய நகர்ப்புற விவகாரம் மற்றும் வீட்டு வசதித்துறை இணை மந்திரி கவுசல் கிஷோர் நேற்று ஆய்வு நடத்தினார். அதில், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் உள்ள வீடற்ற ஏழைகளுக்கு 2024-க்குள் வீடு மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இதன்படி வீடு கட்டும் திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இரு திட்டங்களும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தின்போது கூட வீடு கட்டும் திட்டப்பணிகள் நிறுத்தப்படவில்லை. சிரமமான காலத்திலும் கூட ஏழைகளுக்கு வீடுகளும், கழிப்பறைகளும் மத்திய அரசின் மூலம் கட்டித்தரப்பட்டுள்ளன.

பாகுபாடு காட்டவில்லை

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு எவ்வித பாகுபாடும் காட்டவில்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாகவே கருதுகிறது. தமிழகத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்பதும் தவறானது. அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்