பா.ஜ.க., இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊட்டி, கோத்தகிரியில் பா.ஜ.க, இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-16 15:21 GMT

ஊட்டி, 

ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊட்டி, கோத்தகிரியில் பா.ஜ.க, இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புகார் மனு

தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், போலீசில் புகார் அளித்தும், போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாலர் கே.எம்.சசி, மாவட்ட தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஆ.ராசா எம்.பி. இந்து மதம் குறித்து பேசிய வீடியாவை சமூக வலைத்தளத்தில் பார்த்த போது, மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

இந்து மதத்தையும், இந்து மதம் சார்ந்த பெண்களையும் கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர், அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதை மறந்து இதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட பா.ஜ.க. மகளிர் அமைப்பு சார்பில், இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பா.ஜ.க.வினர் கலந்துகொண்டனர்.

பா.ஜக. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா எம்.பி.யை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர மண்டல தலைவர் ஹால்துரை தலைமை தாங்கினார். இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் போஜராஜன், குமார், அன்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கீழ் கோத்தகிரி, அரவேனு பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்