பா.ஜ.க., இந்து முன்னணியினர் வைத்த விநாயகர் சிலை சேதம்

குடியாத்தத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-08-31 17:11 GMT

குடியாத்தத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 அடி உயர விநாயகர்சிலை

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் டவுன் அண்ணா தெரு மற்றும் மன்னாண்டி ராமசாமி தெரு சந்திப்பில் வைப்பதற்காக பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து சுமார் 8 அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கொண்டு வந்தனர்.

சேதம்

கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலையில் நடத்துவதாக இருந்தது. இரவு ஒரு மணி வரை விழாக் குழுவினர் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தல் அருகே இருந்தனர். பின்னர் தூங்க சென்று விட்டனர். அதிகாலை மூன்று மணி அளவில் பார்த்தபோது விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் இருந்து சுமார் 30 அடி தொலைவில் விநாயகர் சிலை இருந்துள்ளது. மேலும் விநாயகரின் வலது கை உடைக்கப்பட்டும், வயிறு மற்றும் தும்பிக்கை சேதப்படுத்தப்பட்டும் இருந்தது.

3 மர்ம நபர்கள்

விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் பரவியதும் அங்கு இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் உளவு பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் விநாயகர் சிலையை கொட்டகையில் இருந்து வெளியே கொண்டு செல்வது தெரியவந்தது. அந்த சிலையை உடைத்தனரா அல்லது திருடி செல்ல வாகனத்தில் வைக்கும் போது கீழே விழுந்து சேதம் ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பி.லோகேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக வேறு ஒரு விநாயகர் சிலை அங்கு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்