அ.தி.மு.க.வை பா.ஜனதா இரண்டாக பிரித்து வைத்திருக்கிறது;அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அ.தி.மு.க.வை பா.ஜனதா தான் இரண்டாக பிரித்து வைத்திருக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்,
அ.தி.மு.க.வை பா.ஜனதா தான் இரண்டாக பிரித்து வைத்திருக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அமைச்சர் பேட்டி
அண்ணா நினைவு நாளையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பா.ஜனதா விரும்புவதாக அந்த கட்சி கூறியிருக்கிறது. முதலில் இந்த இரண்டு அணியையும் பிரித்து வைத்திருப்பது யார் என பார்க்க வேண்டும். இரண்டு பேரையும் பிரித்து வைத்திருப்பது பா.ஜனதா தான். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதே போல தற்போது இருவரையும் பிரித்து வைத்து குளிர் காயலாம் என பா.ஜனதா நினைத்திருக்கிறது.
ஓநாய் அழுத கதை
அண்ணாவின் பெயரை தாங்கியிருக்கின்ற ஒரு கட்சி, வடநாட்டவர் ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சியில் உதவி கேட்பது என்பது அவர்களின் இயலாமையை காட்டுகிறது. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அ.தி.மு.க. கடந்த காலங்களில் திராவிட இயக்க கொள்கைகளை முறையாக கையாளவில்லை. இப்போது முறையான தலைமையும் இல்லை. கொள்கையும் இல்லாமல், எந்த இலக்கும் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஓநாய், ஆட்டுக்குட்டியை பார்த்து அழுத கதையாக பா.ஜனதா இன்று அ.தி.மு.க.வை பார்க்கிறது. அ.தி.மு.க. அழிந்தால் நாம் அந்த இடத்தை பிடிக்கலாம் என கனவு உலகில் பா.ஜனதா வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அநாகரீகமான செயல்
சென்னை மெரினாவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் வைக்கப்பட்டால் உடைப்பேன் என்று சீமான் சொல்லியிருக்கிறார். சீமானுக்கு கொள்கையும் இல்லை, லட்சியமும் இல்லை. அவருக்கு எழுத்தைப் பற்றியும் தெரியாது. எழுத்து எந்த அளவுக்கு தாக்கத்தை உருவாக்கி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். எழுத்துக்களை நினைவுபடுத்தும்விதமாக பேனாவை வைப்பதை எதிர்ப்பது அநாகரீகமான செயல்.
ஈரோடு இடைத்தேர்தலில் இரண்டு படகுகளில் ஒருவர் பயணம் செய்வது போன்று அ.தி.மு.க. நிலை உள்ளது. முன்பு இரட்டை குழல் துப்பாக்கி என்றார்கள். இப்போது இரண்டு குழலும் வேலை செய்யவில்லை. துப்பாக்கி எப்படி வேலை செய்யும். அதுதான் அ.தி.மு.க.வின் இன்றைய நிலைமை.
இவ்வாறு அவர் கூறினார்.