எனது பேச்சை பா.ஜ.க. திரித்து அவதூறு பரப்புகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை. எனது பேச்சை பா.ஜ.க. திரித்து அவதூறு பரப்புகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-09-07 20:40 GMT

சென்னை,

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் வருவாய் மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு மாவட்ட கழகங்கள் சார்பில் பொற்கிழி வழங்குவது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் நலத்திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டத்தை நடத்துவது ஆகிய 3 விஷயங்களை மையமாக கொண்டே எனது சமீபகால மாவட்ட சுற்றுப்பயணங்களை அமைத்துக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில் சில விஷயங்களை தி.மு.க.வினருக்கு தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம்' கடந்த 2-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த 'சனாதன ஒழிப்பு' மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன். அந்த மாநாட்டில் நான் பேசிய பேச்சை, 'இனப்படுகொலை செய்ய தூண்டினேன்' என்று திரித்து, அதையே மக்களிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற மத்திய அரசின் மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகள் என யார்-யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

நியாயமாக பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளை தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு பிழைப்பே இதுதான். இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், 'பிழைத்துப் போகட்டும்' என்று விட்டுவிட்டேன்.

வடிவேலு கதாபாத்திரத்தில் மோடி

தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.க.வின் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள 'மோடி அண்ட் கோ'வை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.

'சும்மா இருக்கிறதுன்னா, சும்மாவா...' என திரைப்பட நடிகர் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது என வடிவேலுவின் `23-ம் புலிகேசி' கதாபாத்திரத்தோடு போட்டி போட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மீது தாக்கு

'சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியே, கோடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்க போராடிக்கொண்டு இருந்தன.

மணிப்பூர் கலவரத்தை தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்தது, ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் போன்றவற்றை திசை திருப்பத்தான் 'மோடி அண்ட் கோ' இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் மொத்தமாக சிக்கியுள்ளதால், 'ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்', 'பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்' என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சட்டப்படி எதிர்கொள்வேன்

சாமியார்களுக்குத்தான் இந்த காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்துள்ளார். என் தலையைவிட 'முற்றும் துறந்தவரிடம் எப்படி ரூ.10 கோடி என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் 'கொலை மிரட்டல் விடுத்த அந்த சாமியாரை கைது செய்ய வேண்டும்' என்று கோரி தி.மு.க.வினர் தமிழ்நாட்டின் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் புகார் அளித்து வருவதாகவும், அந்த சாமியாரின் உருவப்பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், தி.மு.க.வின் சார்பிலும் பல பணிகளை முதல்-அமைச்சரும், கட்சி தலைவரும் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.

இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது என்று நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் தி.மு.க. வினர் எவரும் ஈடுபடக்கூடாது. என்மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, தி.மு.க. தலைவரின் வழிகாட்டுதலும், கட்சி தலைமையின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்