பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்தார்.
ஆனைமலை,
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்தார்.
பயிற்சி முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கு மண்டல அளவிலான பயிற்சி முகாம் ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு த.மு.மு.க. தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். பயிற்சிக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நாட்டு மக்களை கெடுத்து வரும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு தடை விதிக்க பரிந்துரை செய்வதற்கு நீதிபதி தலைமையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்து உள்ளார். இந்த குழு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற அறிவிப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
கைது செய்ய வேண்டும்
கடந்த 2020-ம் ஆண்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்திய நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி லாபம் கிடைத்து உள்ளது. இந்த லாபத்தில் 20 சதவீத தொகை தமிழகத்தில் இருந்து பெறப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்டோர் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொண்டனர். இதனை தொடர்ந்து ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய 2020-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சட்டம் சரியாக வடிவமைக்கப்பட வில்லை. மேலும் அந்த சட்டத்தை நிைறவேற்ற சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
எனவே, ரம்மி சூதாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் சில மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் மற்றும் நிர்வாகிகளை பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். பயிற்சி முகாமில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.