பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை
நெல்லையில் நேற்று இரவில் பா.ஜனதா நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லையில் நேற்று இரவில் பா.ஜனதா நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பா.ஜனதா நிர்வாகி
நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் விரல்மீண்ட நாயனார் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் ஜெகன் (வயது 34). இவர் பா.ஜ.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்தார்.
இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து மூளிக்குளத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள சுடலை மாடசாமி கோவில் அருகில் உள்ள வாய்க்கால் பாலத்துக்கு சென்ற ஜெகன், அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அங்கிருந்த நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
சரமாரி வெட்டிக்கொலை
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று ெஜகனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ஜெகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகனின் நண்பர்கள், உடனே ஜெகனை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
6 பேருக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைப்பாண்டியன், நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்குகளில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லையில் இரவில் பா.ஜனதா நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.