மாற்று சக்தியாக நாம் தமிழர் கட்சியை மக்கள் பார்க்கிறார்கள்:தமிழக மக்கள் மீது பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை; கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக நாம் தமிழர் கட்சியை மக்கள் பார்க்கிறார்கள் என்றும், தமிழக மக்கள் மீது பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை என்றும் கள்ளக்குறிச்சியில் சீமான் கூறினார்.

Update: 2023-10-24 18:45 GMT

கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டமைப்பை வலிமை படுத்துதல் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பழனியப்பன், மண்டல ஒருங்கிணைப்பாளர் காசிமன்னன், தேசிங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

உறுப்பினர் சேர்க்கை

கூட்டத்தில் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்தல், வலிமைப்படுத்துதல் மற்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணி, கிராமங்கள் தோறும் கிளைகள் என்ற திட்டத்தின் கீழ் 100 வாக்காளர்களுக்கு ஒரு (வாக்குச்சாவடி) என ஒரு தொகுதியாக மாற்றி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்களை நியமித்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவேண்டும். மேலும் பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை காத்திட நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், துரைராஜ், அப்துல் சலீம், மாவட்ட பாசறை நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், நவநீதராஜ் சின்னதுரை, பெருவழுதி மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சீமான் பேட்டி

கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியதால் வறுமையில் உள்ளவர்களுக்கு ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வருகிறது.

மோடி, மோடி என பூச்சாண்டி காட்டித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. மோடி இல்லையென்றால் தி.மு.க.வால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2½ ஆண்டுகளில் நீட் தேர்வை ஒழிப்பதற்காக மிகப்பெரிய போராட்டம் எதுவும் நடத்தவில்லை. ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போது போராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது என்பது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம்.

தனித்து போட்டி

தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை உயர்த்தி வைத்திருந்தது. ஆனால் கூட்டணியில் இடம்பெற்றதால் வாக்கு சதவீதம் வெகுவாக சரிந்து விட்டது. நாங்கள் தனித்துப் போட்டியிடுவது தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் தான் எங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது.

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஒரு மாற்று சக்தியாக எங்களை மக்கள் பார்க்கிறார்கள். எனவே அந்த கட்சிகளோடு நாங்கள் கூட்டணி வைத்தால் மக்கள் எங்களை வெறுப்பார்கள்.

பா.ஜ.க.வை ஆதரிப்போம்

பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியது நல்ல முடிவு. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்களில் யாராவது ஒருவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தால் கொள்கை கோட்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு நாங்களே அவர்களை ஆதரிக்கிறோம். தேர்தலில் அவர்கள் தோற்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் அறிவிக்கட்டும். தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை.

இவ்வாறு சீமான் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்