அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி 18-ந்தேதி முதல் பா.ஜ.க ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை

மகளிர் உரிமைத்தொகையை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் 18-ந்தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Update: 2023-10-14 23:30 GMT

தி.மு.க தேர்தல் அறிக்கை

தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள், காகிதத்தின் கனவுகளாகவே இருக்கின்றன. தி.மு.க அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதி, பல குழப்பங்களுடன் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்ட அந்த திட்டம், 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் என்ற வாக்குறுதி மறுக்கப்பட்டு, ரூ.1,000 உரிமைத்தொகையை பெற கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

உரிமை மறுப்பு

21 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் உரிமைத்தொகை பெற தகுதி உள்ளவர்கள் என்று அரசு வழிகாட்டுதல் கூறுகிறது. பெண்களுக்கு திருமண வயது 18 என்ற நிலையில், திருமணமாகி குடும்பத்தலைவிகளாகி விட்ட 18 முதல் 21 வயதுவரை உள்ளவர்களை குடும்பத்தலைவிகளாக அங்கீகரிக்க தி.மு.க அரசு மறுக்கிறது. இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த குடும்பத்தலைவிகளிடம் இருந்து 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகளில், 1 கோடியே 6 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 57 லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பெண்கள் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

பெண்களின் விலை மதிப்பில்லா உழைப்பை அங்கீகரிக்க வழங்கப்படும் உரிமைத்தொகை என்று அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிமைத்தொகை பெறாத குடும்பத்தலைவிகளை உழைப்பில்லாதவர்கள் என்று நினைக்கிறாரா. அனைவரையும் உள்ளடக்கிய அரசு என்று பெருமை பேசும் தி.மு.க அரசு, பெரும்பாலான இல்லத்தரசிகளை, தகுதியற்ற குடும்பத்தலைவிகளாக அறிவிப்பது, அந்த பெண்மைக்கு பெருமை சேர்க்குமா.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல், அரசு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. விழுப்புரம் மாவட்டத்திலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் தி.மு.க அரசின் அறிவிப்பால் ஏழை, எளிய கிராம மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக, விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உள்பட்ட மாவட்டங்களில், பெருங்கோட்டப் பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம் ஒருங்கிணைப்பில், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி. கங்கை கொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வரும் 18-ந் தேதி தொடங்கி ஒவ்வொரு ஊரில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு தேதிகளில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்