பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் அருகே குளத்தில் கழிவு நீர் சென்று தேங்குவதற்கு கால்வாய் கட்டப்படுவதாக புகார் தெரிவித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் அருகே குளத்தில் கழிவு நீர் சென்று தேங்குவதற்கு கால்வாய் கட்டப்படுவதாக புகார் தெரிவித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
காங்கயம்-சென்னிமலை சாலையில் ஆலாம்பாடி ஊராட்சி நெய்க்காரன்பாளையம் கிராமத்தில் மழைநீர் வடிகால் செல்வதற்காக கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கால்வாயில் சகாயபுரம், காந்தி நகர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கால்வாய் கட்டும் பணியை நிறுத்த வலியுறுத்தி நெய்க்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா காங்கயம் வடக்கு ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் கலா நடராஜன், கோபாலகிருஷ்ணன், நகரத் தலைவர் சிவப்பிரகாஷ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது குளத்தில் சாக்கடைநீர் கலந்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் எஸ்.கோகுல் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை
பேச்சுவார்த்தையில் கால்வாய் கட்டும் பணியை 2 வார காலத்திற்கு நிறுத்தி வைப்பதோடு, சாக்கடைக் கழிவு நீர் கால்வாயில் செல்லாமல், மழைநீர் மட்டுமே வழிந்தோடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறும்போது "மழைநீர் செல்வதற்கு மட்டுமே கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் சகாயபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் செல்வதற்கு ஒவ்வொரு குடியிருப்பிலும் உறிஞ்சு குழாய் அமைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம். உறிஞ்சு குழாய் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். என்றார்.